
கோலாலம்பூர், டிசம்பர்-5 – வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் சேதமடைந்த பொது வசதிக் கட்டமைப்புகளைப் பழுதுபார்க்க, சுமார் RM330 மில்லியன் தேவைப்படுவதாக பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Alexander Nanta Linggi தெரிவித்துள்ளார்.
அவற்றில் RM225.9 மில்லியன் சாலைகளைப்ப் பழுது பார்க்கவும், RM47.4 மில்லியன் கூட்டரசு சாலைகளைப் பராமரிக்கவும், RM54.5 மில்லியன் மலைச்சரிவுப் பகுதிகளை சீரமைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஒதுக்கீடு போதுமானதாக உள்ளது.
எனினும், இந்த பருவ மழைக்கால சேதங்களை மதிப்பீடு செய்து, கூடுதல் நிதி தேவைப்பட்டால் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சிடம் கோரப்படும் என்றார் அவர்.
கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இவ்வாண்டு நல்லவேளையாக தற்போது வரை நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றும் அமைச்சர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளைப் பழுதுபார்க்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அண்மையில் RM500 மில்லியன் சிறப்பு ஒதுக்கீட்டை அறிவித்திருப்பதே, அரசாங்கத்தின் கடப்பாட்டை உணர்த்துவதாக சொன்னார்.



