
கோலாலாம்பூர், நவம்பர் 19-நவம்பர் 22-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நீதி ஊர்வலம், பிரசனா தீக்ஷாவை அவரது தாயார் எம். இந்திரா காந்தியிடம் திருப்பி ஒப்படைக்க அதிகாரிகளை வலியுறுத்துவதையே நோக்கமாகக் கொண்டது என, இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுவான Ingat தெரிவித்துள்ளது.
எனினும், பிரசனா அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டால், இந்த ‘நீதி கேட்கும் நெடும்பயணம்’ உடனடியாக நிறுத்தப்படும் என, அதன் தலைவர் அருண் துரைசாமி கூறினார்.
இந்த அமைதிப் பேரணி சோகோவில் தொடங்கி புக்கிட் அமானில் முடியும். அங்கு இந்திரா, 15 ஆண்டுகளாகக் காணாமல் போனதற்கான அடையாளமாக பிரசனாவின் பொம்மையை போலீஸிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்திரா காந்தியின் மகனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற கூட்டரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, போலீஸ் தலைவருக்கு எதிரான நடவடிக்கை ஆவணமும் அதன் போது ஒப்படைக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தாய்மார்கள் இந்த பேரணியில் பெருமளவில் பங்கேற்கவிருப்பதாகவும் அருண் கூறினார்.
இந்த பேரணி ஆகமம் அணி மலேசியாவுடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திராவின் மதம் மாறிய முன்னாள் கணவரால் கடத்தப்பட்ட பின்னர் 2009-ஆம் ஆண்டு முதல் பிரசனா காணாமல் போனது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரும் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாக, இப்பேரணி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



