
புத்ராஜெயா, டிசம்பர்-1 – மலேசிய மருத்துவ மன்றம் முதன் முறையாக மரபணு நோயியல் நிபுணர்களை பதிவுச் செய்து, மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் இன்று அதனை அறிவித்தார்.
1971-ஆம் ஆண்டு மருத்துவச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் பலனாக மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தால் மரபணு நோயியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்டது இதனை சாத்தியமாக்கியுள்ளது.
2024-ல் நிறைவேற்றப்பட்ட மருத்துவச் சட்ட திருத்தங்களும், இவ்வாண்டு அமுல்படுத்தப்பட்ட விதிகளும், உள்ளூர் பல்கலைக்கழகங்களின் முதுகலை திட்டங்களையும், சுகாதார அமைச்சின் Parallel Pathway பயிற்சிகளையும் வெளிப்படையாக அங்கீகரிக்கும் வலுவான சட்ட அடித்தளத்தை உருவாக்கியுள்ளன என்றார் அவர்.
இதற்கு முன், cardiothoracic எனப்படும் இதயத் தசை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பதிவு, Bayaran Insentif Pakar Pra-Warta ஊக்கத் தொகை, மற்றும் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மலேசிய மருத்துவர்களுக்கான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இவை அனைத்தும் மலேசிய மருத்துவ வெள்ளை அறிக்கையின் 15 ஆண்டு கால தொலைநோக்குத் திட்டத்துடன் இணைந்துள்ளன.
இந்தச் சீர்திருத்தங்கள், மருத்துவப் பணியாளர்களை வலுப்படுத்தி, நோயாளிகளின் பராமரிப்பை பாதுகாக்கும் வகையில், நாட்டின் சுகாதார அமைப்பை எதிர்காலத்துக்கு தயாராக்குகின்றன என சுல்கிஃப்ளி சொன்னார்.



