ஷா ஆலாம், செப்டம்பர்-29 – மலாயாப் பல்கலைக்கழகம் 1962-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, அங்கு பட்டப்படிப்புக்காக பதிவுச் செய்துகொண்ட மிக இளவயது மாணவராக 12 வயது சிறுவன் வரலாறு படைத்துள்ளான்.
சனிக்கிழமை அங்கு பதிந்துகொண்ட Iz Emir எனும் அந்த அறிவு ஜீவி மாணவன், கணிதத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்கிறான்.
மிகச்சிறந்த அறிவாற்றல் மிகுந்த மாணவர்களுக்காக UKM எனப்படும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பெர்மாத்தா பிந்தார் (Permata Pintar) விவேகப் பள்ளியில், Iz Emir தனது முதலாம் படிவத்தை மேற்கொண்டான்.
பின்னர் 8 வயதிலேயே O Level கல்வியையும், 11 வயதில் A Level கல்வியையும் முடித்து சாதனைப் படைத்தான்.
Iz Emir-ரின் செய்தி வைரலானது முதல் அவனை ‘ஜீனியஸ்’ குழந்தையென வலைத்தளவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் சிலர், பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரான The Big Bang Theory-யில் வரும் கற்பனைக் கதாபாத்திரமான Sheldon Lee Cooper-ருடன், Iz Emir-ரின் அறிவாற்றலை ஒப்பிட்டு மெச்சுகின்றனர்.