
கோலாலம்பூர், ஜனவரி-16-கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் 7 நாட்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டும் என, நில உரிமையாளரான ஜேக்கல் டிரேடிங் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஜனவரி 13-ஆம் தேதி அந்த உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, மலேசியா கினி பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு மாதத்தில் மடானி மசூதி மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட ஏதுவாக, நிலத்தை காலி செய்ய கோயில் நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்.
கோவில் முழுமையாக இடம் மாறியதும், ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட “நல்லெண்ண நன்கொடையான” 1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என ஜேக்கல் தெரிவித்துள்ளது.
ஒருவேளை, வெளியேறத் தவறினால் அந்த ‘நல்லெண்ண’ தொகை மீட்டுக் கொள்ளப்படும் என்பதோடு, நில உரிமையாளர் என்ற வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வருமென்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவில் நிர்வாகமோ 7 நாட்களில் முழு கோவிலையும் மாற்றுவது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளதாம்.
புதிய இடம் அரசாங்கம் மூலமே ஒதுக்கப்பட்டாலும், தேவையான நடைமுறைகள் இன்னும் நிறைவேறவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இடமாற்றம் முழுமையாக முடியும் வரை கோயில் நகர வேண்டியதில்லை என கடந்தாண்டு DBKL வாயிலாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இதையடுத்து, அக்கோவில், Jakel Mall கட்டடத்திற்கு எதிரே அதன் பழைய இடத்திலேயே செயல்பட்டு வருகிறது.
இப்போது அந்த வாக்குறுதி ஏன் காப்பாற்றப்படவில்லை என நிர்வாகம் கேள்வி எழுப்புகிறது.
பல மாதங்களாக அமைதியாக இருந்த இந்த விவகாரம் மீண்டும் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
பாரம்பரியத்தை காக்க வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்த, நில உரிமையாளருக்கு அனைத்து உரிமையும் உண்டு என இன்னொரு தரப்பும் வாதிடுகின்றனர்.



