
செராஸ், செப்டம்பர்-4 – மித்ரா – மலேசிய-சீன இளையோர் TVET பயிற்சித் திட்டத்தில் இணைய, இந்திய இளைஞர்களுக்குக் அரசாங்கம் இவ்வாண்டு கூடுதலாக 500 இடங்களை ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து அத்திட்டத்தில் இந்திய இளையோரின் பங்கேற்பு 1,000 பேராக அதிகரிப்பதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் அறிவித்தார்.
சீன அரசாங்கம் 5,125 இடங்களை வழங்கியிருப்பதால், இந்திய இளைஞர்களின் நலன்களுக்காக இக்கூடுதல் இடங்களை உடனடியாக ஒதுக்குவதாக அவர் சொன்னார்.
அவர்களில் 147 பேர் இம்மாதம் சீனா பயணமாகின்றனர்; ஏற்கனவே 175 பயிற்சியை முடித்துள்ளனர் என்றார் அவர்.
2025 MCYTT – MITRA பயிற்சி பங்கேற்பாளர்களை அங்கீகரிக்கும் மற்றும் வழியனுப்பும் விழாவில் உரையாற்றிய போது சாஹிட் அவ்வாறு கூறினார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மித்ரா தலைவர் பி.பிரபாகரன், இந்த TVET தொழில் பயிற்சி இந்திய இளைஞர்களுக்குக் கொண்டு வரும் நன்மைக் குறித்து பேசினார்.
சீனாவில் வெற்றிகரமாக TVET தொழில் பயிற்சியை முடித்துத் திரும்பியுள்ள இளைஞர்கள் சிலர், தங்களின் அனுபவம் குறித்தும் கற்றுக் கொண்ட திறன்கள் குறித்தும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
இந்த TVET கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கு சீன அரசாங்கம் உபகாரச்சம்பளம் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.