
ஷா ஆலாம், அக்டோபர்-10,
சிலாங்கூர், ஷா ஆலாமில் 73 வயது மூதாட்டி ஒருவர் சுமார் 6 மில்லியன் ரிங்கிட் பணத்தை மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்துள்ளார்.
கடந்த மே மாதம், தேசிய நிதி குற்ற தடுப்பு மையமான NFCC-யில் இருந்து அழைப்பதாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், மூதாட்டி பணச்சலவையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி பயமுறுத்தினார்.
இதையடுத்து, விசாரணை என்ற பெயரில் சொத்துகளை அறிவிக்க வேண்டும், 4 புதிய வங்கிக் கணக்குகள் திறக்க வேண்டும், சேமிப்புப் பணத்தை அப்புதியக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என மூதாட்டி நிர்பந்திக்கப்பட்டார்.
அதோடு, தனது ATM வங்கி அட்டைகளை ஒரு விளையாட்டு மைதானத்தில் வைத்து விட்டுச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பிரச்னையில் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தால் வீட்டில் யாருக்கும் தெரியாமல், அனைத்தும் அவர் ‘செய்துகொடுத்தார்.’
பிறகு விஷயம் தெரிந்து மூதாட்டியின் மகன் எச்சரித்த பிறகே இது மோசடி என அவர் உணர்ந்தார்…ஆனால் அந்நேரத்தில் அனைத்து பணத்தையும் அவர் பறிகொடுத்து விட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து, தனிப்பட்ட தகவல்கள், OTP, கடவுச்சொல், TAC போன்றவற்றை தொலைபேசியில் கூற வேண்டாம் என, பொது மக்களுக்கு போலீஸ் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் ஒருபோதும் தொலைபேசி அழைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்காது என்பதையும் நினைவில் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது.