
கோம்பாக், நவம்பர்-7 – பண்டைய ரோம நாகரீகம், கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை மலாய்க்காரர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பேராசிரியரின் செயலுக்காக, அனைத்துலக மலேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகமான UIAM மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
அக்கூற்று பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை; மாறாக அது அந்த பேராசிரியரின் தனிப்பட்ட கருத்தாகும் என, அறிக்கை வாயிலாக UIAM தெளிவுப்படுத்தியது.
கல்வித் துறையில் சுதந்திரம் முக்கியமானது என்றாலும், பொது மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு கருத்தும், துல்லியமான அறிவியல் அடிப்படையில், துறையின் நெறிமுறைகளுக்கு ஏற்ப பொறுப்புடன் வழங்கப்பட வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது.
UIAM தற்போது உள் விசாரணை நடத்தி வருகிறது; பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மை மற்றும் மதிப்பை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
முன்னதாக பேராசிரியர் Dr Solehah Yaacob பேசிய பேச்சுகள் வைரலாகி, UIAM கல்விப் பணியாளர்கள் சங்கமான ASA உள்ளிட்ட பல தரப்புகள் அதற்கு கண்டனங்களைத் தெரிவித்தன.
குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு அது களங்கத்தை விளைவிக்குமென ASA கவலைத் தெரிவித்திருந்தது.
இதே பேராசிரியர், கடந்தாண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
அப்போது நபி முஹம்மது அவர்களின் மனைவி சித்தி காதிஜாவை மலாய் பண்பாட்டுடன் Soleha தொடர்புபடுத்தியிருந்தார்.



