
பினாங்கு அக்டோபர் 13 – பினாங்கில் சுமார் RM405,000 ரிங்கிட் அளவிலான லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரை இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கைது செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் நடந்த இச்சம்பவத்தின் போது சந்தேகநபர் மலேசிய ராணுவ முன்னாள் வீரர்கள் சங்கத்தின் (PVATM) தகவல் தலைவராக பணியாற்றியுள்ளார்.
அவர், PVATM-க்கு சொந்தமான ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளை, சந்தை மதிப்பை விட குறைவான விலையில் விற்றதற்காக நிறுவன உரிமையாளரிடமிருந்து சுமார் 405,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றுள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த லஞ்சத் தொகை அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மொத்தம் 12 முறை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதென்று SPRM கூறியது.
இந்நிலையில் இந்த வழக்கு SPRM சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்று பினாங்கு மாநில SPRM இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி தெரிவித்தார்.