
ஹனோய், நவம்பர்-21 – மத்திய வியட்நாமில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
3 நாட்களில் 150 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழைக் கொட்டி தீர்த்ததே அதற்குக் காரணம்.
இன்னும் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
62 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு மாநிலத்தில் ஆற்றின் மேல் இருந்த தொங்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
முக்கியச் சாலைகள் நிலச்சரிவால் முடங்கியுள்ளன.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் மின்சார துண்டிப்பால் தவிக்கின்றனர்.
Nha Trang நகரில் மொத்தச் சாலைகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
குழந்தைகளும் குடும்பங்களும் கூரைகளில் மேலேறி சமூக ஊடகங்களில் உதவி கோருகின்றனர்.
இதையடுத்து, இராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் போர்க் கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அடுத்த சில நாட்களுக்கு கனமழைத் தொடரும் எனவும், எனவே மேற்கொண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் வியட்நாமிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.



