
கோலாலம்பூர், ஜனவரி-11 – மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, இளைஞர்களிடம் காணப்படும் ஒரு புதிய போக்கை வெளிப்படுத்துகிறது.
அதாவது பல இளம் ஊழியர்கள் வேலையில் சேர்ந்த 18 மாதங்களிலேயே ராஜினாமா செய்கிறார்கள்.
இந்த Gen Z மற்றும் Millennials தலைமுறையினர், ஒன்றரை ஆண்டுகளிலேயே வேலையை விட்டு வெளியேறுவதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வருட இறுதியில் போனஸ் கைக்கு வந்ததும் அதிகமானோர் ராஜினாமா கடிதங்களை நீட்டுகின்றனர்.
குறைந்த ஆரம்ப சம்பளம், வளர்ச்சி வாய்ப்புகள் குறைவு, மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை தேவை ஆகியவற்றை, MEF தலைவர் டத்தோ Dr Syed Hussain Syed Husman இதற்குக் காரணங்களாகக் கூறுகின்றார்.
தவிர, பல இளைஞர்கள் தங்களின் திறன்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று உணர்வதாலும் வேலை மாறுகிறார்கள்.
அதே சமயம், சிலருக்கு, ‘வேலைத் தாவல்’ என்பது திடீர் முடிவு அல்ல; காரணம், கூடுதல் திறன்கள் பெறவும், அதிக ஊதியம் பெறவும் அவர்கள் செய்யும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும் என்றார் அவர்.
இளம் ஊழியர்களின் இப்போக்கு நிறுவனங்களுக்கு சவால்களை உருவாக்கும் என்றாலும், இளம் திறமைகளை தக்கவைக்க சிறந்த பயிற்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் தேவைப்படுகின்றன என்பதை MEF ஒப்புக் கொள்கிறது.
அதே சமயம், “வேலை மாற்றத்தை யோசிக்கும் போது, சம்பள உயர்வை மட்டுமல்லாமல் கற்றல் வாய்ப்புகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்” இளம் ஊழியர்களுக்கு Syed Hussain ஆலோசனைக் கூறினார்.
“அர்த்தமுள்ள திறன்களை வளர்த்துகொள்ளவும், நம்பகத்தன்மை மற்றும் தொழில்முறை பரிந்துரைகளை உருவாக்கவும் நீண்ட காலம் பணியாற்றுங்கள்; தொழில் உயர்வு ஆசைகளைப் பற்றி முதலாளிகளுடன் திறந்த மனதுடன் பேசுங்கள்” என்கிறார் இவர்.



