வெளிநாட்டு இராட்சச பல்லிகளை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு RM20,000 அபராதம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 29 – சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் இனங்களான ஆறு வெளிநாட்டு அபூர்வ இராட்சச பல்லிகளை வைத்திருந்த செல்லப்பிராணி கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் 20,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
சந்தேக நபர் நான்கு ராபின்சன்ஸ் ஆங்கிள்ஹெட் (Robinson’s Anglehead) பல்லிகளையும் இரண்டு டோரியாஸ் ஆங்கிள்ஹெட் (Doria’s Anglehead) பல்லிகளையும் செல்லுபடியாகும் உரிமங்கள் இன்றி வைத்திருந்த குற்றத்தை நீதிபதியின் முன் ஒப்புக்கொண்டார்.
அக்கடையில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு புறம்பான விலங்குகள் இருந்ததற்கான புகார்கள் கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டன.
தண்டனையை அறிவிக்கும் முன், நீதிபதி சம்பந்தப்பட்ட கடையிலுள்ள அனைத்து விலங்குகளின் நிலையையும் சரிபார்க்குமாறு அதிகாரிகளிடம் எச்சரித்தார்.
இந்நிலையில் வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் இன்றி ஆஜராகிய அந்நபர், வெளிநாட்டு விலங்குகள் தொடர்பான சட்டங்களைத் தெரியாமல் தவறிழைத்ததாகவும், தனது தொழிலை சமீபத்தில் தொடங்கியதால் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.