Latestவிளையாட்டு

10 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பந்தில் தங்கம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு செப்பாக் தாக்ரோவில் தங்கம்; சீ போட்டியில் மலேசியா அபாரம்

பேங்கோக், டிசம்பர்-15 – தாய்லாந்து சீ போட்டியில் நேற்று பல முக்கிய வெற்றிகளைப் பதிவுச் செய்து மலேசிய விளையாட்டாளர்கள் பிரகாசித்தனர்.

குறிப்பாக, பூப்பந்துப் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பெர்லி தான் – எம். தீனா ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

86 நிமிடங்களுக்கு நீடித்த இறுதியாட்டத்தில் இந்தோனேசிய இணையை, 21-16, 19-21, 21-17 என தோற்கடித்து comeback வெற்றியை அவர்கள் பதிவுச் செய்தனர்.

உலகத் தர வரிசையில் இரண்டாமிடத்தில் உள்ள பெர்லி தான் – எம் தீனாவின் இவ்வெற்றி, கடந்த பத்தாண்டுகளில் சீ போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமாகும்.

இவ்வேளையில், ஆண்களுக்கான செப்பாக் தாக்ரோவ் போட்டியில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா regu குழுப்பிரிவில் தங்கம் வென்றது.

பரம வைரியும் உபசரனை நாடுமான தாய்லாந்தை அதன் சொந்த இரசிகர்களின் முன்னிலையில் தேசிய வீரர்கள் தோற்கடித்து அரங்கையே அதிர வைத்தனர்.

கடைசிப் புள்ளியைப் பெற்று 2-1 என மலேசியா வெற்றிப் பெற்ற போது, விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் களத்திற்கு ஓடிச் சென்று கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

அப்பிரிவில் மலேசியா ஆகக் கடைசியாக 1991 மணிலா சீ போட்டியில் தங்கம் வென்றது.

குறிசுடும் போட்டியிலும் மூத்த வீரர் Johnathan Wong மூலமாக மலேசியா அசத்தியது.

ஆண்களுக்கான 10 மீட்டர் Air Pistol பிரிவில் பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியப் போட்டியாளர்களைத் தோற்கடித்து Johnathan தங்கப் பதக்கத்தைத் தற்காத்துக் கொண்டார்.

ஏற்கனவே 2017-ல் கோலாலம்பூரிலும் 2021-ல் ஹனோயிலும் வாகைச் சூடிய Johnantha-னுக்கு, இது சீ போட்டியில் கிடைத்துள்ள மூன்றாவது தங்கப் பதக்கமாகும்.

இதற்கிடையில், முதன் முறையாக சீ போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள கபடி போட்டியில் ஆடவர் – மகளிர் என இரு பிரிவுகளிலும் மலேசியா நேற்று வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியது.

சீ போட்டியில் ஞாயிற்றுக் கிழமை மற்றொரு சிறப்பான நாளாக முடிந்த நிலையில், பதக்கப் பட்டியலில் 20 தங்கப் பதக்கங்களுடன் மலேசிய ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தாய்லாந்து 132 தங்கப் பதக்கங்களோடு வசதியான முன்னிலையில் முதலிடத்தில் வீற்றிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!