
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-3 – இந்திய இளையோர் வழிதவறிச் சென்று இன்று குண்டர் கும்பல் தலைவர்களை வழிகாட்டியாக கொண்டு அவர்களுடைய இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கில் கூடுவது வரும் காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு மருட்டலாக உருவாகலாம்.
பிற்படுத்தப்பட்ட கொள்கைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் 13வது மலேசியத் திட்டத்தில் இந்தியர் உருமாற்றத்திற்காக 5 அம்சங்களின் கீழ் 40 பரிந்துரைகள் கடந்த ஜூன் 23ஆம் திகதி பொருளாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ச் சந்தியாகோ தெரிவித்திருக்கிறார்.
13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாக, இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை உருவாக்கும் பணியில், பிரதமர் அலுவலகம் ஆதரவில், Yayasan Iltizam Malaysia அமைப்பு கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தது.
அதில் 200-க்கும் மேற்பட்ட பல்சார் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனான கலந்தாய்வுகளில் திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இந்த 5 அம்சங்களும் பட்டியலிடப்பட்டன.
கல்வி சீர்திருத்தம், பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (SME) முன்னேற்றம், நிறுவன சீர்திருத்தம், நிர்வாக ஒழுங்கு ஆகியவையே அவையாகும்.
அவற்றில் 11 பரிந்துரைகள் முதன்மை நடவடிக்கைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் சார்ல்ஸ் இவ்விவரங்களை வெளியிட்டார்.
இச்சந்திப்பில் Yayasan Iltizam Malaysia தலைவர் குணசேகரன் கருப்பையா, மலேசியா மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் துறையின் Dr பூவரசி பாலன், EWRF அமைப்பைச் சேர்ந்த கல்வியாளர் Dr சித்ரா கிருஷ்ணன் அடியோடி, மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்ற சங்கத்தின் தலைவர் மனோகரன் மொட்டையன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறிப்பாக கல்வி தொடர்பான பிரச்னைகளை சுட்டிக் காட்டிய அவர் மாணவர்கள் பாதியிலேயே பள்ளியிலிருந்து நிற்பதைத் தவிர்க்க, 2027-க்குள் தேசியத் தடுப்புத் திட்டம், 2026-க்குள் அனைவருக்கும் கட்டாயமாக பாலர்பள்ளி கல்வி, பெண்கள் மற்றும் இளைஞர்களின் திறன் தேர்ச்சி மற்றும், வருமானம் உருவாக்கத் திட்டம் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
அதே சமயம், 2030-க்குள் 40 People’s First Community Labs திட்டம், 2028-க்குள் இந்திய மாணவர்களுக்கு 5,000 TVET இடங்கள், 2026 ElevateHER பெண்கள் தலைமைத்துவத் திட்டம், 2027 Rebel Builders இளைஞர் தொழில் முயற்சி மேடை உருவாக்கம், 2026 மலேசிய இந்திய மேம்பாட்டு மற்றும் புதுமை நிதி (MIDIF), மாதம் 10-30 ரிங்கிட் என மொத்தம் 50 மில்லியன் ரிங்கிட் வரையில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி சமூக பங்களிப்புகளை ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவையும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, MDEC-கின் கீழ் 2026 SME டிஜிட்டல் திட்டம், MITRA அமைப்பை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றி, நாடாளுமன்ற கண்காணிப்புடன் செயல்பட செய்யும் திட்டம், 2026 முதல் அரை ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கப்படும் பொது தகவல் கண்காணிப்பு மன்றம் அமைத்து அதன் வழி அரசாங்கத்தின் செயல்திறன், செலவுகள் மற்றும் முடிவுகள் அனைத்தையும் வெளிப்படையாக காட்ட வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் பரிந்துரைகளின் வழி நாம் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான் – இந்தியர்களின் தலைவிதி 13-ஆவது மலேசியத் திட்டத்தில் திருத்தி எழுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என சார்ல்ஸ் திட்டவட்டமாகக் கூறினார்.