
மலாக்கா, ஜூலை 23- நேற்று மலாக்கா தாமான் புக்கிட் ரம்பாயில் 15.06 கிராம் எடையிலான 2 ஹெராயின் பாக்கெட்டுகளுடன், போதைக்கு அடிமையான காதலர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படுவதற்கு முன், URB மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவின் (URB) உறுப்பினர்கள் அவ்விருவரையும் தடுத்து நிறுத்த முற்படும்போது, அவர்களிடமிருந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
URB உறுப்பினர்கள் MPV ரோந்துப் பிரிவினருடன் இணைந்து வாகனத்தைத் துரத்தி செல்ல முற்படும்பொழுது, அந்தக் காதலர்கள் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி, பொதுமக்கள் ஒருவரின் காரை மோதி பின்பு ரோந்துப் பிரிவு உறுப்பினரின் மோட்டார் சைக்கிளையும் இடித்து தள்ளியுள்ளனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், கிறிஸ்டோபர் பாடிட் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான URB உறுப்பினர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார் என்றும் அவ்விருவரும் வெற்றிகரமாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் மேல் நடவடிக்கைக்காக தெங்கேரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், சிறுநீர் பரிசோதனையில் இருவருக்கும் மெத்தம்பேட்டமைன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இந்த வழக்கை குற்றவியல் சட்டம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சந்தேக நபரின் காரை MPV வாகனம் துரத்தி செல்லும் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி எதிர்வினை கருத்துக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.