
கோலாலம்பூர், ஜூலை 21 – கவச வாகனங்களை தாமதமாக விநியோகம் செய்த பாதுகாப்பு குத்தகையாளரிடமிருந்து 162.75 மில்லியன் ரிங்கிட் அபராதம் வசூலிக்கத் தவறியதற்காக ராணுவத்தை 2025ஆம் ஆண்டின் அரசாங்க தலைமை கணக்காய்வாளர் அறிக்கை சாடியுள்ளது.
2011 மற்றும் 2014 க்கு இடையில் கையெழுத்திடப்பட்ட ஐந்து உடன்பாடுகளின் கீழ் கவச வாகனங்கள் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவை திட்டமிட்ட கால அட்டவணைக்கு பின்னரே விநியோகிக்கப்பட்டதாக அரசாங்க தலைமை கணக்காய்வாளரின் 2025 அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், RM107.54 மில்லியன் மதிப்புள்ள பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் ஒப்பந்தங்கள் 86 சிறிய வேலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது திறந்த குத்தகைக்கு பதிலாக நேரடி பேச்சு மற்றும் கொள்முதல் விலைப்பட்டியல் மூலம் ஒப்பந்தங்களை வழங்க அனுமதித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தணிக்கை முடிவுகளைக் கவனத்தில் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க செயல்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறோம் அந்த அறிக்கையில் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களையும் வசூலிக்கவும், ஒப்பந்தங்களைப் பிரிக்கும் நடைமுறையை நிறுத்தவும் தணிக்கைத் தலைவர் தற்காப்பு அமைச்சிற்கு வலியுறுத்தியுள்ளார்.