
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 23 –
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், மலேசியாவில் பொழுதுபோக்கு வாகனங்கள் (Recreational Vehicles – RV), வாடகை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்காக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக் அறிவித்துள்ளார்.
இந்த புதிய நடவடிக்கை மலேசியாவில் வளர்ந்து வரும் சுற்றுலா துறையின் ஒரு பகுதியாக அமையும் அதே வேளை, RV அடிப்படையிலான சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காகவும் இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் தாங்களே ஓட்டி பயன்படுத்தும் வகையில் ஆர்.வி. வாகனங்களை வாடகைக்கு எடுக்க முடியும்.
2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட்ட தனியார் ஆர்.வி. வாகனங்கள், 15 ஆண்டுக்கு குறைவான வயதுடையதாகவும், சாலை போக்குவரத்து துறையின் தொழில்நுட்ப சோதனையைத் தாண்டியதாகவும் இருந்தால், அவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதே வேளை, 2026 ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து, ஆர்.வி. உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஒரே சாளர முறையில் (Single Window System) எளிமைப்படுத்தும் வாய்ப்பு பரிசீலிக்கப்படும் என்றும் லோக் கூறினார்.