
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 23 – குடிநுழைவுச் சோதனைகளை வேகப்படுத்தி, விமானம், நிலம் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் நுழையும் பகுதிகளில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 125 நுழைவு மையங்களில் மொத்தம் 635 தானியங்கி குடிநுழைவு கதவுகளான Autogate-கள் அமைக்கப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கோலாலம்பூர் அனைத்துலக நிலையமான KLIA மற்றும் ஜோகூர் CIQ வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய நுழைவுப் பகுதிகளிலும் அமல்படுத்தப்படவுள்ளது. தற்போது நாட்டில் 75 ‘Autogate’-கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியப் பயணிகள், 63 குறைந்த அபாய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், தகுதியான நீண்டகால அனுமதி பெற்றவர்கள், தூதரக பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த ஆட்டோகேட் வசதியைத் தாராளமாக பயன்படுத்தலாம்.
இந்நிலையில், புதிய ஆட்டோகேட் நிறுவல் பணிகள் 2026 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக தொடங்கப்படவுள்ளது. இதற்கு ஏற்ற வகையில், QR குறியீடு அடிப்படையிலான விரைவு சோதனை முறையும் நடைமுறையில் உள்ளது.ஜோகூர் CIQ-வில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த இந்த முறை விரைவில் KLIA உள்ளிட்ட இதர முக்கிய விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, முகம், கைரேகை அடையாளம், e-பாஸ்போர்ட் சிப் சரிபார்ப்பு, போலி ஆவணங்களைக் கண்டறிதல் மற்றும் நேரடி கண்காணிப்பு பட்டியல் சோதனை போன்ற உயர் பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பயணியின் விவரங்களில் முரண்பாடு இருந்தால், ஆட்டோகேட் திறக்கப்படாது என்றும் இது எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.



