
கிள்ளான், டிசம்பர் 22-MMM எனப்படும் மண்ணின் மைந்தன் மலேசியா இணைய ஊடகம், இவ்வாண்டு MMM Hall of Fame 2025 எனும் புதிய அங்கீகார நிகழ்ச்சியை நடத்தி சாதனையாளர்களை கௌரவித்தது.
டிசம்பர் 21-ஆம் தேதி கிள்ளான் AEON புக்கிட் திங்கியில், தேசிய விளையாட்டு ஜாம்பவான்கள், கல்வியாளர்கள், ஊடகத்துறை நிபுணர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 500 பேர் முன்னிலையில் அச்சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி, மலேசியாவின் வளர்ச்சிக்கும் கலாச்சார பாரம்பரியத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்த நபர்களை நினைவுகூரும், கௌரவிக்கும் மற்றும் கொண்டாடும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக, MMM நிறுவனர் பி. குமார் தெரிவித்தார்.
கலை, விளையாட்டு, கல்வி, ஊடகம் மற்றும் சமூக சேவையில் செய்த சிறப்பான பங்களிப்புக்காக மொத்தம் 26 பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தேசியக் கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ கே. ராஜகோபால், கராத்தே பிதாமகர் டத்தோ T. பொன்னையா, ‘பறக்கும் பாவை’ ஜி.சாந்தி, ‘தங்க மகன்’ டத்தோ எம். ராமசந்திரன், மூத்த நகைச்சுவை கலைஞர் சத்தியா, மலேசிய ‘மனோரமா’ ஏகவல்லி, சைக்கிளோட்ட ஜாம்பவான் எம். குமரேசன், எவரெஸ்ட் நாயகர்கள் டத்தோ மகேந்திரன் – டத்தோ மோகனதாஸ், பிரபல இயக்குநர் விமலா பெருமாள், கால்பந்து சகாப்தம் டத்தோ சந்தோக் சிங் உள்ளிட்டோர் அதில் அடங்குவர்.
2013-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மண்ணின் மைந்தன் மலேசியா, தொடக்கத்திலிருந்தே, உள்ளூர் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை ஆதரித்து, ஊக்குவித்து, மேம்படுத்தி வருகிறது.



