லண்டன், நவம்பர்-17 – நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் ஒரு மடங்கு அதிகரித்து, உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டோர் வசிக்கும் வட்டாரங்களில் அவ்வெண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துள்ளதாக, இங்கிலாந்தின் The Lancet எனும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் இடம்பெற்றுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 140 மில்லியன் பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், 1990-ஆம் ஆண்டு பெரியவர்கள் மத்தியில் 7 விழுக்காடாக இருந்த நீரிழிவு நோய் விகிதம், 2022-ல் 14 விழுக்காட்டை எட்டியது கண்டறியப்பட்டது.
வாழ்க்கை முறை மாற்றம், அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னை, பரவலான சுகாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை அதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மொத்த நீரீழிவுப் பாதிப்புகளில், பாதிக்கும் மேற்பட்டவை 6 நாடுகளை மட்டுமே மையமிட்டிருப்பதானது, உலகலவில் சுகாதார ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து வருவதை காட்டுகின்றது.
212 மில்லியன் பேருடன், உலகிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.
148 மில்லியன் பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும், 42 மில்லியன் பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், இந்தோனீசியா, பிரேசில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
உயர் வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு சிகிச்சை விகிதங்கள் மேம்பட்டுள்ள நிலையில், பின்தங்கிய நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட 445 மில்லியன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.