
கோத்தா திங்கி, ஜூலை-17- PLKN 3.0 தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் முதலிரண்டு தொடர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் பல்வேறு காரணங்களுக்காகப் பயிற்சியில் கலந்துகொள்ள தவறியுள்ளனர்.
உடல்நலப் பிரச்னைகளும், பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடரச் சென்றதும் அவற்றில் முக்கியக் காரணங்கள் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) சொன்னார்.
தற்போது வரை பரீட்சார்த்த முறையிலேயே இந்த PLKN 3.0 பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது; அடுத்தாண்டு தொடங்கியே அது முழு அளவில் அமுலுக்கு வருமென்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பாளர்களின் கட்டொழுங்கையும் அடையாளத்தையும் மேம்படுத்தும் நோக்கில் 45 நாட்களுக்கு இராணுவப் பயிற்சிக் கூறுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதலிரண்டுத் தொடர்களிலும் பங்கேற்றவர்கள், இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்குமாறு ஊக்கமளிக்கும் கருத்துகளைத் தெரிவித்திருப்பதாக அமைச்சர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
முதல் தொடர் கடந்த ஜனவரி 12 தொடங்கி பிப்ரவரி 25 வரை கோலாலாம்பூர் Askar Wataniah இராணுவத் தளத்திலும், இரண்டாவது தொடர் மே 11 தொடங்கி ஜூன் 24 வரையிலும் நடைபெற்றன.
மூன்றாவது தொடர் பயிற்சிகள், வரும் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 21 வரை பஹாங், பெக்கானில் உள்ள Askar Wataniah இராணூவத் தளத்திலும் நடைபெறுகின்றன.