
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21 – கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்த சலசலப்பு தொடர்பில், PSM கட்சியின் துணைத் தலைவர் S. அருட்செல்வன் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
மாலை 6 மணிக்குள்ளாக வந்து விடுமாறு போலீஸ் கூறியதை அடுத்து, அருள் தானாக சரணடைந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் M. சிவரஞ்சனி தெரிவித்தார்.
இக்கைது சட்டவிராதமானது என்பதோடு போலீஸின் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அறிக்கையொன்றில் அவர் குற்றம் சாட்டினார்.
தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுரிமைப் பிரச்னை தொடர்பில் மகஜர் மற்றும் சட்ட முன்வரைவைக் கொடுப்பதற்காக, அருட்செல்வன் தலைமையில் PSM கட்சியினரும் சுமார் 100 தோட்டத் தொழிலாளர்களும் முன்னதாக நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலாகச் சென்றனர்.
எனினும் அவர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளும் சலசலப்பும் ஏற்பட்டது; அதில் அருட்செல்வமும் கீழே விழுந்தார்.
இந்நிலையில் அச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறி விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டது.
அதன் தொடர்பான விசாரணைக்கே அருட்செல்வன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.