கோலாலம்பூர், செப்டம்பர் -29 – நாட்டில், இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 61 வயதுக்கு மேற்பட்ட 1,916 முதியவர்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு 25 கோடியே 50 லட்சம் ரிங்கிட் என புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் (Datuk Seri Ramli Mohamed Yoosuf) தெரிவித்தார்.
மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில், இணைய மோசடிக்கு ஆளாகும் முதியவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சிறியதே.
என்றாலும், அவர்கள் பறிகொடுத்த தொகை மிகவும் அதிகமாகும்.
இணைய மோசடி கும்பல்களின் முக்கியக் குறியாக முதியவர்கள் இருப்பதை இது காட்டுவதாக டத்தோ ஸ்ரீ ரம்லி சொன்னார்.
2021 முதல் 2023 வரைக்குமான மூன்றாண்டு காலக்கட்டத்தில் இணைய மோசடியால் முதியவர்கள் இழந்த தொகை மட்டும் 55 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டாகும்.
மொத்த இழப்பில் அது 20 விழுக்காடு என்பதை டத்தோ ஸ்ரீ ரம்லி சுட்டிக் காட்டினார்.
எனவே, இணைய மோசடி குறித்து முதியவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த குடும்ப உறுப்பினர்களும் பங்காற்ற வேண்டும்.
முன்பின் தெரியாத அழைப்புகள் குறித்தும், அறிமுகங்கள் குறித்தும் கவனமுடனும் விழிப்புடனும் இருக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமென்றார்அவர்.