ஷா அலாம், நவ 12 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் மூலமாக 257,300 ரிங்கிட் மதிப்புடைய 8.04 கிலேகிரேம் ஷாபு போதைப் பொருளை கடத்த முயன்ற ஆடவன் பிடிபட்டான்.
23 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி KLIA 2 உதவி போலீஸ்காரர்களின் ஒத்துழைப்போடு நவம்பர் 7 ஆம் தேதி விடியற்காலை மணி 5.30 அளவில் கே.எல்.ஐ.ஏ போதைப் பொருள் குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு போலீஸ குழுவினால் கைது செய்யப்ப்டான்.
இந்த விவகாரத்தில் இருவர் சம்பந்தப்பட்டிருந்தனர். மற்றொரு சந்தேகப் பேர்வழி போலீஸ் கைது செய்வதற்கு முன் சபாவிற்கு சென்றுவிட்டான். எனினும் நாங்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து அந்த நபர் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
KLIA 2 ஆவது முனையத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் கோத்தா கினபாலு – கோலாலம்பூர் – கோத்தா கினபாலு விமான டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. புத்ரா ஜெயாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவன் தங்கியிருந்தான் .
அந்த ஆடவன் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கோலாலம்பூர் வந்துச் சேர்ந்ததாக உசேய்ன் கூறினார். புத்ரா ஜெயா ஹோட்டலில் தங்கியிருந்த அந்த நபருக்கு கும்பல் ஒன்று போதைப் பொருள் மற்றும் விமான டிக்கெட்டை வழங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.