
புத்ராஜெயா, ஜூலை-17- உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், 3 மாதக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை “கற்பனைக்கே எட்டாத, பைத்தியக்கார செயலாக” வர்ணித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தக் கொடூர சம்பவம் படமாக எடுக்கப்பட்டு இணையத்தில் வேறு விற்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சின் நேற்றைய மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது, அவர் இந்த அதிர்ச்சிகரமான விவரத்தை வெளியிட்டார்.
“நள்ளிரவு 12.30 மணியளவில் போலீஸார் என்னை அழைத்து அது குறித்து விளக்கமளித்தார்கள். அந்த நேரத்தில் அழைக்கிறார்கள் என்றால், அது எந்தளவுக்கு பரிதாபகரமான விஷயம் என புரிந்துகொள்ளுங்கள்” என சைஃபுடின் வேதனையுடன் குறிப்பிட்டார்.
எனினும், அந்தக் கொடூரம் எங்கு எப்போது நடந்தது என்பது பற்றி அமைச்சர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விசாரணை பிரிவை பலப்படுத்த உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக சைஃபுடின் கூறினார்.
அமைச்சரே மேற்கொண்டு விவரிக்க முடியாத அளவுக்கு நடந்துள்ள இக்கொடூரம் குறித்து, போலீஸ் தரப்பிலிருந்து விரைவில் விவரங்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிது.