
அலோர் ஸ்டார், ஜூலை-21- கெடா, கூலிமில் மளிக்கைக் கடையொன்றில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 400,000 ரிங்கிட் மதிப்பிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மதுபானங்கள், மானியம் பெறப்பட்ட எரிவாயு தோம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வரி ஏய்ப்பு செய்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 118,520 சிகரெட்டுகளும் 333 மதுபான பாட்டில்களும், 62 LPG எரிவாயு தோம்புகளும் அவற்றிலடங்கும்.
புக்கிட் அமான் போலீஸின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில், உயிருள்ள மலைப்பாம்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
தனியாக 35,000 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 35 வயது உள்ளூர் ஆடவர் விசாரணைக்காகக் கைதானார்.
கடத்தல், அரசாங்க மானியம் பெற்ற . பொருட்களின் கசிவு மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்ததாக போலீஸ் விளக்கியது.