
சிம்லா, ஜூலை-22- இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பகிரங்கமாக அதுவும் வெகு விமரிசையாக ஒரே பெண்ணை 2 சகோதரர்கள் திருமணம் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளில் குறிப்பாக உட்புறங்களில் ஒரே பெண்ணை ஒருவருக்கும் மேற்பட்டோர் திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இதனைக் காண முடியும்.
இதனை ‘ஜோடிதரன்’ அல்லது ‘திரவுபதி பிரதா’ என பாரம்பரியமாக அழைக்கின்றனர்.
மூதாதையர்களின் சொத்து பிரிந்து போக கூடாது; அதே சமயம் எந்தவொரு பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாகக் கூடாது என்ற நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களால், அங்கு ஒரே பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற திருமணங்கள் பொதுவில் அவ்வளவாக வெளியில் தெரியாது.
வீட்டுக்குள்ளேயே நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் ‘காதும் காதும் வைத்தது போல்’ திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள்.
ஆனால் இந்த அண்மையச் சம்பவம் வழக்கத்திற்கு மாறாக தடபுடலாக பொதுவெளியில் பெரும் ஆரவாரத்துடன் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹட்டி எனும் இனத்தைச் சேர்ந்த பிரதீப் நெகி, கபில் நெகி எனும் சகோதரர்களே, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற இளம்பெண்ணை கரம்பிடித்துள்ளனர்.
கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சகிதமாக 3-நாள் வைபவமாக திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.
மணமக்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வலைத்தளவாசிகள் மத்தியில் பேச்சுப் பொருளாகியுள்ளது.