
ஜோர்ஜ்டவுன், ஜூலை-23- பினாங்கில், நோயாளிகளிடம் சில்மிஷம் செய்ததால் ஏற்கனவே 3 முறை கைதாகியும் ‘பட்டும் திருந்தாத’ மருத்துவர், மீண்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார்.
43 வயது அவ்வாடவர் இம்முறை பாயான் லெப்பாஸில் (Bayan Lepas) உள்ள தனியார் கிளினிக்கில் பெண் நோயாளியிடம் ‘வேலையைக்’ காட்டியுள்ளார்.
ஜூன் 29-ஆம் தேதி காலை 11.40 மணியளவில் தம்மிடம் அம்மருத்துவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக, பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் போலீஸில் புகார் செய்தார்.
அதில், வயிற்று வலிக்காக கிளினிக் போன இடத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மருத்துவர் தன்னை சட்டையைக் கழற்றச் சொல்லி, மார்பகங்களைத் தொட்டதாக அப்பெண் புகாரளித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் வாக்குமூலம் அளிக்க வந்த போது அந்நபர் கைதாகி, மேல் விசாரணைக்காக இன்று வரை தடுத்து வைக்கப்பட்டார். அவரின் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு முன் ஒரு மருத்துவமனையிலும் 2 கிளினிக்குகளிலும் 3 பெண் நோயாளிகளிடம் அவ்வாடவர் சில்மிஷம் செய்துள்ளார்.
சிகிச்சை என்ற பெயரில், பெண் நோயாளிகளை சட்டையைக் கழற்றச் சொல்லி ஒரே இடத்தில் ஓட வைப்பதும், உடல் பரிசோதனையின் போது நோயாளிகளைத் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதுமாக அவர் அநாகரீகமாக நடந்துகொண்டது அப்போது அம்பலமானது.