
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-9- பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது, கெடா ம.இ.கா.
மாநில ம.இ.காவின் நேற்றைய ஆண்டுப் பொதுப்பேரவையில் அத்தீர்மானம் நிறைவேறியது.
மாநாட்டை தொடக்கி வைக்க வந்திருந்த தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனையும் அது ஆச்சரியப்படுத்தியது.
பின்னர் இது குறித்து கருத்துரைத்த கெடா ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர் SK. சுரேஷ், தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தானுடன் ஒத்துழைப்பது குறித்து ம.இ.கா மத்திய செயலவை இதுவரை விவாதிக்கவில்லை என்றார்.
கெடா ம.இ.கா பேராளர்கள் அவர்களாகவே அத்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளனர்.
என்றாலும், இறுதி முடிவெடுப்பதை கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விடுவதாக அவர் கூறினார்.நடப்பு மத்திய அரசாங்கத்தின் மீது கெடா இந்தியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பக்காத்தான் ஹராப்பானுக்கு ஏன் வாக்களித்தோம் என அவர்கள் வருத்தமடைந்துள்ளனர். இனியும் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதால் ஒரு தைரியமான முடிவை எடுக்க வேண்டும்.
இதை அம்னோவிடம் கூறி அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. காரணம், முன்பு பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்க முடிவெடுத்த போது அம்னோ அதனை ம.இ.காவிடம் கூறவில்லை.
எனவே இப்போது பெரிக்காத்தானில் இணைய ம.இ.கா முடிவெடுத்தால் அது அக்கட்சியின் சொந்த முடிவாகும்.
தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால் கட்டொழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகக் கூடுமோ என்ற பயமும் தமக்கில்லை என சுரேஷ் கூறினார்.
இந்தியச் சமூகம் மனதில் நினைப்பதை வெளிப்படுத்துகிறேன், அவ்வளவுதான் என்றார் அவர்.