
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 29- சிலாங்கூர், செமெனியிலுள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTM) PALAPES உறுப்பினர் சியாம்சுல் ஹாரிஸ் ஷம்சுதின் (Syamsul Haris Shamsudin) அவர்களின் கல்லறை இன்று காலை மீண்டும் தோண்டப்படுகிறது.
இந்தப் பணி இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியாம்சுலின் உடல், இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனை (HKL) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்படவுள்ளது.
காவல்துறையினர் இன்று காலை முதலே கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.
கல்லறை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இந்த மறு தோண்டல் பணியில் ஈடுபட மாட்டார்கள் எனவும், அனைத்தையும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு கல்லறையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28 ஆம் தேதியன்று, சியாம்சுல் ஹாரிஸ், ஜொகூரின் உலு திராம் இராணுவ போர் பயிற்சி மையத்தில் (PULADA) பயிற்சி பெற்றபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு கோத்தா திங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.