
பூச்சோங், செப் 9 – பூச்சோங்கிலுள்ள உணவு மையத்தில் சட்டவிரோதமாக வேலை செய்த குடியேறிகளை குடிநுழைவுத்துறை நேற்றிரவு கைது செய்தது.
பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து OP Kutip நடவடிக்கையில் 60 வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 274 பேருடன் மொத்தம் 334 பேர் பரிசோதிக்கப்பட்டதாக குடிநுழைவுத்துறை அமலாக்க இயக்குநர் பஸ்ரி ஒத்மான் ( Basri Othman ) தெரிவித்தார்.
அடையாள ஆவணங்களைக் கொண்டிருக்காத 55 குடியேறிகள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 25 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் உணவு பரிமாறுபவர்களாகவும் இன்னும் சிலர் சமையல்காரர்களாகவும் வேலை செய்து வந்ததாக பஸ்ரி கூறினார்.
குடிநுழைவுத்துறையின் நடவடிக்கையின்போது சில சட்டவிரோத குடியேறிகள் அங்கிருந்து தப்பியோட முயன்ற போதிலும் , எற்கனவே குடிநுழைவு அதிகாரிகள் அந்த இடத்தில் முற்றுகையிட்டிருந்ததால் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்களது வேலை அனுமதி பெர்மிட்டை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டிய அவர்கள் உணவுக் கடைகளில் வேலை செய்தது பரிசோதனையின்போது கண்டறியப்பட்டதோடு , அவர்களில் பலர் காலாவதியான ஆவணங்களை கொண்டிருந்ததோடு இன்னும் சிலர் நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் குடிநுழைவு விதிமுறையை மீறியிருப்பதாக பஸ்ரி தெரிவித்தார்.