
கோலாலம்பூர், அக்டோபர்-2 – தேசியப் பதிவிலாகாவான JPN, Foto Kenangan Terindah அல்லது ‘மிக அழகான நினைவுகள்’ என்ற பெயரில் சிறப்பு பதிப்பு புகைப்படத் தொகுப்புக்கான முன்பதிவுகளை இன்று தொடங்கி வரும் அக்டோபர் 30 வரை திறந்துள்ளது.
77-வது தேசியப் பதிவு தினத்தையொட்டி இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக, JPN அடையாள அட்டை பிரிவு இயக்குநர் Muhammad Asraf Sukadi தெரிவித்தார்.
ஆர்வமுள்ள மலேசியர்கள் அனைவரும் fotoic.jpn.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் உடனே முன்பதிவு செய்யலாம் என்றார் அவர்.
இம்முயற்சிக்கு கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட மிகுந்த வரவேற்பு அதாவது 11,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்ததாக அவர் கூறினார்.
தனிப்பட்ட புகைப்படத் தொகுப்பு, உரிமையாளரின் 12, 18 வயது மற்றும் தற்போதைய MyKad புகைப்படங்களை கொண்டிருக்கும்.
இதன் விலை 75 ரிங்கிட்; அதுவே குடும்பத் தொகுப்புக்கான விலை 150 ரிங்கிட்டாகும்.
தேசியப் பதிவு தினம் 2013 அக்டோபர் 1 ஆம் தேதி முதன் முதலாக கொண்டாடப்பட்டது; 1948 அக்டோபர் 1-ஆம் அன்று வெளியிடப்பட்ட காகித அடையாள அட்டையின் வரலாற்றை நினைவுகூரும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.