
ஸ்டோக்ஹோல்ம் (சுவீடன்), அக்டோபர்-11,
தென்னமரிக்க நாடான வெனிசுவலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நோபல் பரிசை இவர் தான் வெல்வார் என கடைசி வரை எந்த யூகமுல் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு வெளியான கையோடு, அந்த விருதை வெனிசுவலா மக்களுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பிற்குப் சமர்ப்பிப்பதாக 58 வயது அந்த பெண் அரசியல்வாதி சொன்னார்.
“நாம் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். வெனிசுவலாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அமெரிக்க மக்களும், ட்ரம்பும் எங்களின் முக்கியக் கூட்டாளிகள்” என மச்சாடோ தனது “X” பதிவில் குறிப்பிட்டார்.
மச்சாடோவின் இந்த சமர்ப்பணத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட்டும் (Karoline Levitt) சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நோபல் பரிசு தனக்கே கிடைக்க வேண்டும் என கூறி வந்த ட்ரம்ப்புக்கு அது கிடைக்காமல் போனது உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும், மச்சாடோவின் வெற்றி சமர்ப்பணம் ஆறுதலாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மச்சாடோ, அரசியல் அழுத்தங்களால் கடந்த ஓர் ஆண்டாக மறைவில் உள்ளார்.
எனினும், அவரின் ஜனநாயகப் போராட்டத்தைப் பாராட்டி, நோபல் குழு இந்த ஆண்டு அமைதிப் பரிசை வழங்கியுள்ளது.
வெனிசுவலா எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விருதை வரவேற்று, இது நாட்டில் ஜனநாயக மாற்றத்துக்கான முக்கிய ஊக்கம் என வருணித்தனர்.