
கோலாலாம்பூர், அக்டோபர்-17,
2026 வரவு செலவுத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில், குறைந்தது 10 விழுக்காட்டு பூமிபுத்ரா அல்லாதோருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான லிம் குவான் எங் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
2026 பட்ஜெட்டில் பூமிபுத்ரா அல்லாத சமூகங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், சிலர் ஏன பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வெறும் 3 விழுக்காடு மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த எதிர்மறை எண்ணத்தைச் சமாளிக்கும் வகையில் குவான் எங் மக்களவையில் அப்பரிந்துரையை முன்வைத்தார்.
பிரதமர், இஸ்லாமிய மத வளர்ச்சிக்காக JAKIM வாயிலாக வழங்கப்படும் ஒதுக்கீட்டை 2023-ல் RM1.5 பில்லியனிலிருந்து 2026-ல் RM2.6 பில்லியனாக உயர்த்தியுள்ளார்.
அதே சமயம், இஸ்லாம் அல்லாத மதங்களுக்கான வழிபாட்டுத் தலங்களுக்கான நிதியோ 2023-ல் இருந்த அதே RM50 மில்லியனாகவே நீடிக்கிறது; இஸ்லாமியர்களுக்கு உயர்த்தப்பட்டது போல இதுவும் உயர்த்தப்பட வேண்டும் என்பதே முஸ்லீம் அல்லாதோரின் கோரிக்கையாகும் என குவான் எங் கூறினார்.