
செப்பாங், நவம்பர்-8 – KLIA Aerotrain இரயில் சேவை இனி ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிறுத்தப்படும்.
மற்ற நேரங்களில் அது வழக்கம்போல இயங்கும்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு வழி விட ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மலேசிய விமான நிலைய நிறுவனமான MAHB கூறியுள்ளது.
இந்த நேரத்தில், பயணிகள் முதன்மை முனையம் மற்றும் துணைக்கோளக் கட்டடம் இடையே பயணிக்க, shuttle பேருந்து சேவை வழங்கப்படும்.
இந்த இடைநிறுத்தம் Aerotrain-னை பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் வைத்திருக்க உதவும் என MAHB நம்பிக்கைத் தெரிவித்தது.
எனவே, இரவு அல்லது அதிகாலை விமானப் பயணமுள்ளவர்கள் சிறிது கூடுதல் நேரம் ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு Aerotrain சேவை கடந்த ஜூலையில் மீண்டும் தொடங்கியது முதல், அது அடிக்கடி பழுதாவதும், இதனால் பயணிகள் விரக்தியடைவதுமாகப் போய்க்கொண்டிருப்பதை அடுத்து, MAHB இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.



