
செனாய், நவம்பர் 18-ஜோகூர் செனாயில், போலி மலேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதற்காக 86 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
Taman Teknologi Johor-ரில் அட்டைப் பெட்டி மற்றும் அச்சு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட Ops Kotak சிறப்பு சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
அவர்களில் 67 பேர் பெண்களாவர். இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸை சேர்ந்த அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமான கடப்பிதழ்களை வைத்திருந்தாலும், வேலை செய்வதற்காக போலி மலேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது அனைவரும் தடுப்புக் காவலில் உள்ளனர். இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என குடிநுழைவுத் துறை எச்சரித்தது.
இவ்வேளையில் அதே சோதனையில், உள்ளூரைச் சேர்ந்த வயது குறைந்த 16 பையன்களும் 15 பெண் பிள்ளைகளும் தங்களின் உடன்பிறப்புகள், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வேலை செய்வதும் கண்டறியப்பட்டது.
அவர்களில் சிலர் பள்ளி மாணவர்கள்…தினசரி கைச்செலவுக்காக அவர்கள் பகுதி நேரமாக வேலை செய்வதும் தெரிய வந்தது.



