
கோலாலம்பூர், நவம்பர் 22-தாம் மத்திய அமைச்சரவையில் இணையலாம் என்றும், தமது இடத்தை பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் நிரப்பலாம் என்றும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த மகளான நூருல் இசா சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்றால் அவருக்கு நிர்வாக அனுபவங்கள் கிடைக்கும்; இதுவே மத்திய அமைச்சரவையில் அவர் இடம் பெற்றால் ‘தந்தையால் உயர்ந்த மகள்’ என்ற சர்ச்சைகள் எழும்.
எனவே சிலாங்கூர் மந்திரி பெசார் பொறுப்பே அவருக்கு சிறந்தது; இது குறித்து நூருல் இசாவிடமே தாம் பேசியிருப்பதாகவும், முடிவு அவர் கையில் என்றும் Keluar Sekejap போட்காஸ்ட் பேட்டியில் பேசிய போது அமிருடின் சொன்னார்.
2022 பொதுத் தேர்தலில் பாராம்பரியத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் தோற்ற பிறகு, தற்போது நூருல் இசா எந்த பதவியிலும் இல்லை.
கொஞ்ச காலம் பிரதமருக்கு மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகராக இருந்தார்.
ஒருவேளை இது சாத்தியமானால் மலேசியாவின் முதல் பெண் மந்திரி பெசார் என்ற வரலாற்றுப் பெருமைக்கு நூருல் இசா சொந்தத்காரர் ஆவார்.
டிசம்பரில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் மொத்தமாக 3 அமைச்சுகள் காலியாகி இருக்கும் என்பதால், அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.



