
கோலாலம்பூர், டிசம்பர்-16,
நீண்ட கைகளைக் கொண்ட குரங்கினமான 2 gibbon குரங்குகளை இந்தியாவுக்குக் கடத்தும் பெண்ணொருவரின் முயற்சி, KLIA-வில் முறியடிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து மும்பைக்குப் புறப்படவிருந்த 38 வயது பெண்ணின் பயணப் பெட்டியை பரிசோதனை செய்தபோது, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே வெள்ளை நிறத்திலான 2 gibbon குரங்குகள் உயிரோடு இருந்தன.
RM 6,000 மதிப்பிலானவை எனக் கூறப்படும் அக்குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, அப்பெண்ணும் விசாரணைக்காக கைதுச் செய்யப்பட்டார்.
2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அழிந்து வரும் உயிரினங்கள் மீதான 2008 அனைத்துலக வர்த்தகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட குரங்குகள், PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.



