
செர்டாங், டிசம்பர் 19-சமூக வலைத்தளங்களில் எழும் தொல்லைகள் நேரடியாக வாழ்க்கையில் ஆபத்தாக மாறுவதன் சான்றாக, சிலாங்கூர் செர்டாங்கில் அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
முதுகுத் தண்டுவட காயம் காரணமாக உடல் ஊனமுற்ற 45 வயது ராணி ஆறுமுகம், டிசம்பர் 8-ஆம் தேதி தன் பணியிடத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேரால் தாக்கப்பட்டார்.
தன் உறவுக்கார பெண்ணுக்கு எதிரான டிக் டோக் தொல்லைக்கு பதிலளித்து அவர் வீடியோ வெளியிட்டதே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ராணி பலமுறை குத்தப்பட்டு, அறைந்தும் தாக்கப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர்.
அத்தாக்குதல் நேரடியாக டிக் டோக்கிலும் ஒளிபரப்பப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
ராணி இது குறித்து உடனடியாக போலீஸில் புகாரளித்து மருத்துவ சான்றுகளையும் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், CCTV காட்சிகள் தாக்குதலை உறுதிப்படுத்துவதாகவும், சந்தேக நபர்கள் மீது வழக்கு தொடர போதுமான ஆதாரம் உள்ளதாகவும் ராணியின் வழக்கறிஞர் பிரகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.
இணையத் தொல்லைகள் உடல் ரீதியான வன்முறையாக மாறி வருவதை அவர் எச்சரித்து, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
போலீஸார் புகாரை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ராணி பணியிட இடைநீக்கம் காரணமாக கூடுதல் மன உளைச்சலை எதிர்கொள்கிறார்.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.



