
ஷா அலாம், டிச 18 -ஷா அலாம், செத்தியா அலாமில் நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் துன் சாமிவேலு புத்தாக அறிவியல் அறையும், அப்பள்ளின் நீண்ட கால வரலாற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 100 ஆண்டு சிறப்பு மலரான மஞ்சரி வெளியீடும் , புறப்பட நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கல்வியின் மேம்பாட்டிற்காக அயராது பாடுபட்ட ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவர் துன் சாமிவேலு அவர்களின் பெயரில் இப்பள்ளியில் புத்தாக்க அறிவியல் அறையை அமைப்பதற்கு டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் இதற்கு முன் 50,000 ரிங்கிட் வழங்கி உதவியிருந்தார்.
அந்த பணத்தைக் கொண்டு அந்த அறிவியல் புத்தாக்க அறை வெற்றிகரமாக சீரமைக்கப்பட்டதோடு ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பில் அவரது பிரதிநிதியாக செனட்டர் சிவராஜ் சந்திரன் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். அதோடு பள்ளிக்கு ஆயிரம் ரிங்கிட் நன்கொடை கொடுத்து மஞ்சரி மலரையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை பள்ளியின் மேலாளர் வாரிய தலைவர் ஆறுமுகம் சுப்ரமணியம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததோடு தலைமையாசிரியை ம.சூரியகுமாரி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ் பள்ளி கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்கி வருவது குறித்து தனது பாராட்டை ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.
மொத்தம் 480 மாணவர்களைக் கொண்ட நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
அதற்கு அடையாளளமாக புறப்பாட நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட 184 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர்.
28 ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியின் மாணவர்கள் கல்வி அடைவு நிலை மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் மிளிர்வதற்கான முயற்சிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
புத்தாக்க அறிவியல் போட்டியில் இப்பள்ளியின் மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றதோடு காற்பந்து, கபடி போட்டிகளிலும் மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.
ஷா அலாம் வட்டாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் புதிய நகரான செத்தியா அலாமில் அமைந்துள்ள நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப் பள்ளியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.



