
லிப்பிஸ், டிசம்பர்-28 – கேமரன் மலையில் உத்தேச இரயில் நிர்மாணிப்புத் திட்டம் குறித்து ஆய்வு செய்யத் தயாராக இருப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முன்மொழிவும் மாநில அரசுக்கு வரவில்லை.
ஆனால், மக்கள் வசதிக்கும், அடிப்படை வசதிகளுக்கும் உதவக்கூடிய திட்டமாக இருந்தால், அரசாங்கம் அதை ஆராய்வதில் தவறில்லை என்றார் அவர்.
கேமரன் மலை, சுற்றுப் பயணிகளால் நிரம்பும் பிரபல மலைப்பகுதியாகும்.
இதனால் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனைக் குறைக்க, தானா ராத்தா பிரிஞ்சாங், ப்ளூ வேலி பகுதிகளை இணைக்கும் இரயில் பாதை முன்மொழியப்பட்டுள்ளது.
அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது மக்களுக்கு சுலபமான போக்குவரத்து வசதியையும், மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் எனக் கூறப்படுகிறது.



