
கோலாலம்பூர், அக்டோபர்- 27,
மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்படும் இலவச BAS.MY பேருந்து சேவையில் ஆகஸ்ட் மாதம் வரை 49,611 பேர் பயனடைந்துள்ளனர் . BAS.MY சலுகை அட்டை மூலம் இலவச பேருந்து சேவையை அனுபவித்த 49,611 பயனர்களில் ஒட்டுமொத்தமாக 78 விழுக்காட்டினர் மூத்த குடிமக்கள் என்றும், அதைத் தொடர்ந்து 13 விழுக்காட்டினர் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆறு விழுக்காட்டினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று விழுக்காட்டினர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
“ஸ்டாப்-அண்ட்-கோ பேருந்து சேவை உருமாற்றுத் திட்டத்தின் கீழ் BAS.MY சேவை மாநிலங்களின் தலைநகர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே கவனம் செலுத்துகிறது. இதுவரை, BAS.MY சேவை கங்கர், கோத்தா ஸ்டார், ஈப்போ, சிரம்பான் , மலாக்கா, ஜோகூர் பாரு, கோலா தெரெங்கானு, கோத்தா பாரு மற்றும் கூச்சிங் ஆகிய பகுதிகளில் செயல்படுகிறது. இந்த சேவை சபா தலைநகர் கோத்தா கினபாலுவிலும் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் அமர்வின் போது அந்தோனி லோக் கூறினார்.



