
சுபாங் ஜெயா, அக்டோபர்-26,
போலி குடியுரிமை ஆவணங்கள் விவகாரம் தொடர்பில் அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA-வுடன் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, FAM எனப்படும் மலேசிய கால்பந்து சங்கம் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், அதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் FAM பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றார் அவர்.
“உண்மையில், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள கலப்பு மரபின வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்; எனவே, ஒருவர் மீது பழி போடுவதை விடுத்து, CEO உள்ளிட்ட ஒட்டுமொத்த நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்” என நேற்று சுபாங் ஜெயாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் TMJ கூறினார்.
ஆவணங்களைச் சமர்ப்பித்ததில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம்; ஆனால் அது ஆவண மோசடி அல்ல என அவர் தெளிவுப்படுத்தினார்.
என்றாலும், FIFA அதன் முடிவை மாற்றாது என்றே தோன்றுகிறது; மேல்முறையீட்டுக்குப் பிறகு ஒருவேளை அபராதத் தொகைக் குறைக்கப்படலாம்; ஆனால் தண்டனை முழுமையாக இரத்துச் செய்யப்படாது என்றே தாம் நினைப்பதாக TMJ சொன்னார்.
FAM-முக்கு RM1.8 மில்லியன் அபராதமும், 7 கலப்பு மரபின வீரர்களுக்கும் தலா RM 11,000 அபராதமும் 12 மாத ஆட்டத் தடையும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், நாட்டின் கால்பந்து நிலை குறித்து தன்னை நோக்கி வரும் விமர்சனங்கள் யாவும் புதிதல்ல என்பதால், அவற்றைப் பற்றி தாம் அலட்டிக் கொள்வதில்லை என TMJ கூறினார்.
என்னமோ தேசியக் கால்பந்து அணியின் பிரச்னைகளுக்கு எல்லாம் தாம் தான் மூலக் காரணம் என பேசி வருகிறார்கள்; இன்று நேற்றல்ல, 13 ஆண்டுகளாக அதைத் தான் கூறி வருகிறார்கள் என துங்கு இஸ்மாயில் கூறினார்.
தன்னைக் குறை கூறுவது தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரவில் நிம்மதியானத் தூக்கத்தைத் தருமென்றால், தாராளமாக அதைச் செய்யட்டும், அது ஒரு பிரச்சனையே இல்லை என்றும் TMJ நகைப்புடன் கூறினார்.



