
கோலாலம்பூர், ஜூலை-22- தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Green Packet நிறுவனம், அதன் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் குழும தலைமை செயலதிகாரியாக டத்தோ வீரா ஷாஹுல் ஹமீட் தாவூத்தை (Datuk Wira Shahul Hameed Dawood) நியமித்துள்ளது.
நேற்று முதல் இந்நியமனம் அமுலுக்கு வந்துள்ளது.
புத்தாக்கம், உள்ளடக்கிச் செல்லுதல் மற்றும் வட்டார டிஜிட்டல் முன்னேற்றம் ஆகியவற்றின் சங்கமத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அந்நிறுவனம் முனைவதால், இந்த தலைமைத்துவ மாற்றம் Green Packet குழுமத்துக்கு ஒரு துணிச்சலான திருப்புமுனையைக் குறிக்கிறது.
இது வெறும் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு மட்டும் அல்ல. மாறாக தொழில்நுட்பத்தை உண்மையான உலக மேம்பாட்டுக்கு ஏற்ப உருமாற்றுவதே முக்கியம். Green Packet மலேசியாவையும் தாண்டி அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்பலம், அடித்தளம், உத்வேகம் ஆகியவற்றை கொண்டிருப்பதாக ஷாஹுல் தெரிவித்தார்.
டத்தோ ஷாஹுல் ஹமீட் பல்வேறு தொழில்துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
வலுவான பொது-தனியார் பங்காளித்துவத்தை உருவாக்கும் அதே வேளை, உருமாற்றத்தை உந்தச் செய்யும் திறனுக்காக பரவலாகவே அவர் மதிக்கப்படுகிறார்.
ஆகக் கடைசியாக மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்தார்.
5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து கடந்த ஏப்ரலில் பதவி விலகினார்.
பதவி காலத்தில், மில்லியன் கணக்கான மலேசியர்களையும் தொழில்துறை, கல்வித்துறை, அனைத்துலக அமைப்புகளையும் உள்ளடக்கி, நாட்டில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றைத் திரட்டுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
ஷாஹுலின் தலைமைத்துவத்தின் கீழ் தான், HRD Corp என்றுமில்லா உருமாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டது.
அக்கழகத்தை நவீனமயமாக்கியப் பெருமையும் அவரையே சாரும்.
மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டின் தாக்கத்தை தேசிய மற்றும் இவ்வட்டார அளவில் விரிவுப்படுத்துவதற்காக, HRD Corp அதன் வியூக திசையை மறுவடிவமைக்கவும் ஷாஹுல் உதவினார்.
2024-ஆம் ஆண்டில், அவர் HRD Corp-பை 434.2 மில்லியன் ரிங்கிட் என உயரிய வருவாய் ஈட்ட வழிவகுத்தார்; இதன் மூலம் 127 மில்லியன் ரிங்கிட்டை அது வரிக்கு முந்தைய இலாபமாகப் பதிவுச் செய்தது.
கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களும் 4 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தன.
இலக்கிடப்பட்ட மற்றும் வியூக முதலீட்டு முயற்சிகளின் விளைவாக, 2024-ஆம் ஆண்டில் HRD Corp 5.3% வலுவான முதலீட்டு வருவாயைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.