
கோலாலம்பூர், செப்டம்பர்-20,
மலேசிய இளையோரிடையே HIV தொற்றுகள் அதிகரித்து வருவதாக மலேசிய ஏய்ட்ஸ் மன்றம் எச்சரித்துள்ளது.
இதனைக் களைய அவசரமான மற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அது கூறியது.
புள்ளிவிபரங்களின் படி, 20 முதல் 39 வயதுக்குள் உள்ளவர்கள் புதிய HIV சம்பவங்களில் 75 விழுக்காட்டைக் கொண்டுள்ளனர்.
பாலியல் தொடர்பே தொற்றின் முக்கியக் காரணமாக அதாவது 90 விழுக்காட்டுக்கும் மேலான சம்பவங்களை உட்படுத்தியுள்ளது.
ஆனால், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் வெறும் 11 விழுக்காட்டினருக்கு மட்டுமே HIV தடுப்பு குறித்த சரியான அறிவு உள்ளது.
பாலியல் கல்வி குறித்த மௌனமும் தவறான கண்ணோட்டமும் தான் இளைஞர்களை தவறான தகவல்களுக்கு இட்டுச் செல்வதாக, ஏய்ட்ஸ் மன்றத்தின் துணைத் தலைவர் Dr நூர் அஃபிகா சாலே (Dr. Nur Afiqah Mohd Salleh) எச்சரித்தார்.
இந்நிலையில், நம்பிக்கைத் தரும் விதமாக ‘KAMI’ என்ற மாணவர் வழிநடத்தும் திட்டம் 5 பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கு சக மாணவர்களே கல்வி, பரிசோதனை மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு அளிக்கச் செய்கிறது.
2026-ஆம் ஆண்டுக்குள் இதை 14 பல்கலைக் கழகங்களுக்கு விரிவாக்க திட்டம் இருப்பதாக, நேற்று நடைபெற்ற Elevate & Empower High Tea நிகழ்வில் அவர் சொன்னார்.
HIV உயிர்கொல்லி நோயிலிருந்து மலேசிய இளையோரை பாதுகாக்க, அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொது மக்களிடமிருந்து மேலும் வலுவான ஆதரவை அதிகரிக்கவும் அந்நிகழ்வில் அழைப்பு விடுக்கப்பட்டது.