
தோக்யோ, மே-31 – JENDELA எனப்படும் தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம் மற்றும் 5G அதிவேக இணையச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மலேசியாவின் அனுபவம் வட்டார நாடுகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக சில ஆசிய பசிஃபிக் நாடுகள் மலேசியாவின் அந்த அனுபவத்தைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
ஜப்பான் தலைநகர் தோக்யோவில் APT-MM 2025 ஆசிய பசிஃபிக் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றியப் பிறகு அவர் அவ்வாறு சொன்னார்.
இணையக் குற்றங்களையும் மோசடிகளையும் எதிர்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் அவ்வட்டார நாடுகளுடன் விவாதிக்கப்பட்டன.
ஆசிய பசிஃபிக் நாடுகளுடன் மேலும் அணுக்கமான ஒத்துழைப்பை நல்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று இன்றும் நடைபெறும் இந்த 2-நாள் மாநாட்டில் மலேசியப் பேராளர் குழுவுக்கு ஃபாஹ்மி தலைமையேற்றுள்ளார்.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிய பசிஃபிக் நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
‘ஆசிய-பசிஃபிக் பகுதியில் நிலையான, உள்ளடக்கிய மற்றும் சமமான டிஜிட்டல் மாற்றத்திற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்’ என்ற கரும்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில், 31 உறுப்பு நாடுகளும் 19 அழைப்பு நாடுகளும் கலந்துகொண்டுள்ளன.