
கோலாலம்பூர், டிசம்பர் 17 – கடந்த டிசம்பர் 12 ஆம் தேதியன்று, மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இருவரை மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையமான AKPS கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA-வில் கைது செய்து மேல் விசாரணையை நடத்தி வருகிறது.
முன்னதாக, செர்பியாவைச் சேர்ந்த அவ்விரு இராணுவ வீரர்களும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், KLIA டெர்மினல் 1-ல் கடப்பிதழ் சோதனை நேரத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அவர்கள் இஸ்தான்புல் செல்லவிருந்த நிலையில் பிடிபட்டனர்.
ஆரம்ப விசாரணையில், அவர்களின் கடப்பிதழ்களில் சமீபத்திய நுழைவு முத்திரை இல்லாதது கண்டறியப்பட்டது.
MyIMMS பதிவுகளின்படி, அவர்கள் நவம்பர் 14 ஆம் தேதியன்று KLIA டெர்மினல் 2 வழியாக நுழைந்ததாக பதிவு உள்ளது. இந்நிலையில் இருவரும் குடிநுழைவுச் சட்டத்திற்கு கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



