
செப்பாங், ஜூலை-4 – KLIA விமான நிலையத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு Aerotrain இரயில் சேவை தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அது செயலிழந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் மலேசிய விமான நிலைய நிறுவனமான MAHB அறிக்கை வாயிலாக அதனைத் தெளிவுப்படுத்தியது.
உண்மையில் கனமழையால் இரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது; இதனால் இன்று காலை 11 மணிக்கு அதன் சேவை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தப்பட்டது.
இருப்பினும், அந்நேரத்தில் shuttle பேருந்து சேவைகள் வழங்கப்பட்டதால், முனையத்திற்கும் விமானமேறும் இடத்திற்குமான பயணிகளின் இயக்கம் பாதிக்கப்படவில்லை.
“மோசமான வானிலையின் போது தண்ணீரை வெளியேற்ற Aerotrain சுரங்கப்பாதை வடிகால் அமைப்பில் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன; என்றாலும் இன்று ஒரு பம்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தண்ணீர் தானாக வடிகட்டப்படுவது தடுக்கப்பட்டது” என MAHB மேலும் விளக்கியது.
பாதுகாப்பு நடவடிக்கையாக, தண்ணீர் manual முறையாக வடிகட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு பாதை பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வரை இரயில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குழுக்களால் முழு ஒப்புதல் வழங்கப்பட்டு, மதியம் 12.15 மணிக்கு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதையும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.
Aerotrain இரயில்களில் ஒன்று பழுதானதாக முன்னதாக, ஒரு ஃபேஸ்புக் பயனர் கூறியிருந்தார்; அதே சமயம் ஒரு பயணியின் செயல்களால் இரயிலின் கதவு சிக்கிக்கொண்டதாக இன்னொரு வலைத்தளவாசி கூறினார்.
1998 முதல் KLIA-வில் உள் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்ந்த Aerotrain, பின்னர் சேதமடைந்ததால் 20230-ல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதிய Aerotrain இரயில் சேவை ஜூலை 1 ஆம் தேதி செயல்படத் தொடங்கியது; இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 270 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 3 இரயில்கள் அடங்கும்.