
கோலாத்திரெங்கானு, ஜூலை 2 – சனிக்கிழமை மூவரின் உயிர்களைப் பலிகொண்ட கவிழ்ந்த சுற்றுலாப் படகின் தலைவரின் உரிமம் விசாரணையின் முடிவு தெரியும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
படகு கடுமையாக சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டதால், அதன் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என கிழக்கு வட்டார கடல்துறையின் துணை இயக்குநர் முகமட ஹலிசாம் சம்சூரி ( Mohamad Halizam Samsuri ) தெரிவித்தார்.
இந்த துயரச் சம்பவத்தை விசாரித்து அதன் சரியான காரணத்தைக் கண்டறிய, 1952 இன் படகு சட்டத்தின் 334 விதிமுறையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான போலீஸ் விசாரணையின் முடிவு வரும்வரை, படகு ஓட்டுநர் உரிமத்தையும் கடல்சார் துறை இடைநிறுத்தியுள்ளது. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் படகு உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட படகின் உரிமம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை செல்லுபடியாகும் என்றாலும், இரவில் அதனை இயக்குவது மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட சட்ட மீறல்கள் தெளிவாக இருந்ததாக Mohamad Halizam தெரிவித்தார்.
7.9 மீட்டர் அளவுள்ள ஒரு சிறிய படகு இரண்டு பணியாளர்களையும் அதிகபட்சம் 10 பயணிகளையும் மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதில் இருந்த பயணிகள் யாரும் உயிர் காப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.