
புத்ராஜெயா, நவம்பர்-21 – வாக்காளர்களின் முகவரிகளை அவர்களின் MyKad அடையாள அட்டை அடிப்படையில் புதுப்பிக்க தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, தேர்தல் ஆணையமான SPR புதிய பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளது.
தற்போது SPR-க்கு அந்த அதிகாரம் இல்லாததால், சிலர் இடம்பெயர்ந்தாலும் பழைய முகவரியிலேயே வாக்காளர் பட்டியலில் நீடிக்கின்றனர்.
இதனால், சில பகுதிகளில் ஏற்கனவே இடிக்கப்பட்ட குடியிருப்புகள் கூட இன்னும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக SPR ஆணையர் Zoe Randhawa கூறுகிறார்.
எனவே, வாக்குப் பதிவு வசிப்பிடம் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர வாக்காளரின் பிறந்த இடமோ அல்லது சொந்த ஊரின் அடிப்படையில் இல்லை என்றார் அவர்.
உதாரணமாக, சபா அல்லது சரவாக்கில் பிறந்தவர்கள், அவர்கள் கோலாலம்பூரில் வாழ்ந்தால் அங்கு தான் வாக்களிக்க வேண்டும். இல்லையெனில், “எளிய பெரும்பான்மை” என்ற ஜனநாயகக் கொள்கை பாதிக்கப்படும் என அவர் நினைவூட்டினார்.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், வாக்காளர் பட்டியல் துல்லியமாகும், மக்கள் வாழும் இடத்திலேயே அவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றார் அவர்.
நடப்பில், வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரியை புதுப்பிப்பதா இல்லையா என்பது வாக்காளர்களின் தேர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



